அமாநுஷ்ய விளக்கமளிக்கும் அர்த்தமற்ற செயல்

தற்காலத்தில் வேதப்பிரசங்கங்களில் பெரும்பாலானவை வேதவிளக்க விதிகளைப் பின்பற்றாமல் கொடுக்கப்பட்டு வரும் பிரசங்கங்களாகவே இருக்கின்றன. அதாவது திருச்சபை வரலாற்றில் சபைப் பிதாக்களின் காலத்தில் இருந்ததைப் போல “ஆவிக்குரியதாக்குதல்” (spiritualising) என்ற முறையைப் பின்பற்றிக் காணப்படுகின்றன. வேதம் ஆவிக்குரிய சத்தியங்களால் நிறைந்திருந்தபோதும், “ஆவிக்குரியதாக்குதல்” எனும் முறை மிகவும் மோசமானது. இம்முறை வேத சத்தியங்களை நாசப்படுத்திவிடும் முறையாகும். இம்முறையை அமாநுஷ்ய விளக்கமளிக்கும் முறை என்றும் கூறலாம்.

ஒரிகன் என்ற சபைப்பிதா ஒரு வேத வசனத்திற்கு நான்கு அர்த்தங்கள் இருப்பதாக விளக்கி அந்த நான்கு அர்த்தங்களையும் தந்திருக்கிறார். இது மிகவும் தவறான முறை. ஏனெனில் சீர்திருத்தவாதிகள் விளக்கியிருப்பதுபோல் வேத வசனத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் காண முயல்வது சத்தியத்திற்கு முரணான செயல். ஆவிக்குரியதாக்குதல் முறை, வேத வசனத்தில் அதில் வெளிப்படையாக சொல்லப்பட்டிராத, இரகசியமாகப் புதைந்து காணப்படும் ஒரு கற்பனைப் பொருளை நாடிச் செல்கிறது. உண்மையில் ஆவிக்குரியதாக்குதல் முறையின்படி ஒரு வசனத்தில் காணப்படும் அர்த்தம் ஒருபோதுமே அதில் வெளிப்படையாகக் காணப்படாததாகவே இருக்கும்.

அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலினால் வரும் ஆபத்து

ஆவிக்குரியதாக்குதல் முறையின்படி அதைச் செய்கிறவர்கள் வரலாற்று நிகழ்வுகளுக்கு அமாநுஷ்ய ஆத்மீக விளக்கம் கொடுப்பார்கள். அதேபோல், உவமைகள், உருவகங்கள், அடையாள மொழிநடைகள், உரைநடை போன்ற அனைத்திற்குமே அவர்கள் அமாநுஷ்ய ஆத்மீக விளக்கம் கொடுப்பார்கள். இப்படி விளக்கம் கொடுப்பவர்கள் எல்லோரும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. ஒரே வசனத்திற்கு வெவ்வேறு வகை ஆத்மீக விளக்கத்தை ஒவ்வொருவரும் கொடுத்து வருவார்கள்.

அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதல் முறை பல ஆபத்துக்களை விளைவிக்கிறது:

1. எழுத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கர்த்தரின் வார்த்தைகளின் மெய்ப்பொருளை அறியமுடியாமல் செய்கிறது.

2. வேதம் தரப்பட்டிருக்கும் இலக்கிய வகைகள் அனைத்தையும் உருவகப்படுத்தி ஆத்மீக விளக்கம் கொடுத்தல்.

3. வேத வசனம் காணப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் அதை விளக்கி ஆத்துமாவுக்கு விளக்காமல் ஆத்துமாவைத் திசை திருப்பும் ஆபத்து.

4. வேதத்தின் ஆணித்தரமான போதனைகளைத் துவம்சம் செய்துவிடும் ஆபத்து. ஆவிக்குரியதாக்குதலால் எது சரி, எது தவறு என்பதை அறிந்துகொள்ள முடியாது. எது நல்லது, எது கேடானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது.

5. வேதத்தை ஒரு அமாநுஷ்ய (mystical) நூலாகப் பயன்படுத்தி ஒருவரின் உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்றபடி விளக்கும் பேராபத்து இது. இதன் மூலம் வேதம் எவ்விதப் பொருளும் இல்லாததாக மாற்றப்படுகிறது. சத்தியத்தை அசத்தியமாக்கும் சாத்தானின் முறை இது.

உண்மையில் ஆவிக்குரியதாக்குதல் என்ற ஒரு முறை வேதத்தில் காணப்படவில்லை. ஆதித் தீர்க்கதரிசிகளோ, இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலனான பவுலோ, ஏனைய நிருபங்களை எழுதியவர்களோ அத்தகைய முறையைப் பின்பற்றியதில்லை. வேதம் சுட்டிக்காட்டாத இந்த முறை இந்த உலகத்தைச் சேர்ந்த தத்துவஞானிகள் பின்பற்றி வந்த முறை. அதற்கும் சத்திய வேதத்திற்கும் தொடர்பே இல்லை. இதைத்தான் இன்று பிரசங்கிகளில் அநேகர் பின்பற்றிக் கற்றவர்களையும், கல்லாதவர்களையும் இருட்டில் வைத்திருக்கிறார்கள். இத்தகைய முறையைத்தான் கொரிந்தில் இருந்த தத்துவஞானிகள் (தர்க்கசாஸ்திரிகள்) பின்பற்றி வந்தனர். அவர்களைப் பவுல் சந்தித்தபோது, அவர்கள் பவுலிடம் புதிய போதனைகளை எதிர்பார்த்தார்கள். அதாவது, எவருமே இதுவரை கண்டும், கேட்டுமிராத விஷயங்களை எதிர்பார்த்தார்கள். பவுல் விளக்கிய சுவிசேஷம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதை மூடத்தனமாக அவர்கள் கருதினார்கள்.

1 கொரிந்தியர் 1:18-21
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

இதேபோலத்தான் அத்தேனே பட்டணத்தில் இருந்த எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கரும் புதிய விஷயங்களைப் (நவமான) பவுல் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 17:19-21
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள். அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

சாதாரணமாக நாம் வாசிக்கும்போது வேதத்தில் கண்டுகொள்ள முடிந்ததை ஒதுக்கிவிட்டு கண்ணுக்குப் புலப்படாத ஆத்மீக விளக்கமளிப்பவர்கள் தற்காலத்தில் அதைத் தெரிந்தே செய்கிறார்கள்.  அவர்கள் வேதஞானத்தில் வளரவோ, அதில் தேர்ச்சி அடையவோ இல்லை. வேதம் எதிர்பார்க்கும் மெய்யான ஊழிய அழைப்பும், “போதக ஆற்றலும்” (1 தீமோத்தேயு 3) அவர்களிடம் காணப்படாததால் ஆத்துமாக்களின் கண்களுக்குப் புலப்படாத ஒன்றைச் சொல்லி அவர்களை நம்ப வைக்கிறார்கள். இதை இதயமில்லாமலும், தேவ பயமில்லாமலும் தொடர்ந்து செய்து தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள். இவர்கள் இதைச் செய்வதற்கு இன்னுமொரு காரணம் போதகப் பணியைத் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். பணம் சம்பாதிப்பதற்கு நியாயமான வேறு வழிகளில் போவதற்கு இவர்களுக்கு மனதில்லை. இலகுவாக பணம் சம்பாதிக்க ஊழியம் அவர்களுக்குத் துணைபோகிறது.

சமீபத்தில் எங்கள் சபைக்குப் புதிதாக வர ஆரம்பித்திருக்கும் ஒரு பெண்மணி பிரசங்கத்தை அனுபவித்துக் கேட்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தடவையும் அது முடிந்தபின் எனக்கு நன்றி கூறி, அது தன் இருதயத்தைத் தொடுவதாகக் கூறிவருகிறார். அத்தோடு, தான் இதுவரைப் போய் வந்திருந்த சபையில் போதிப்பவர் தான் பேச எடுத்துக்கொண்டிருக்கும் வசனத்தைத் தெளிவாக ஒருபோதுமே விளக்காமல் தவளை தாவுவதுபோல் பல இடங்களுக்குத் தாவிவிடுவார் என்றும், அதனால் எதையுமே தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். இந்தப் பெண்மணிக்கு அத்தகைய தவறான பிரசங்கியிடம் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலாகிய வேதவிளக்க முறைக்குப் பலியாகித் தொடர்ந்து அழிந்துவருகிறார்கள்.

அமாநுஷ்ய விளக்கமளித்தலும், ஆவிக்குரிய பயன்பாடுகளும்

ஆவிக்குரிய அமாநுஷ்ய விளக்கமளித்தலுக்கும், பிரசங்கத்தில் இருந்து ஆவிக்குரிய பயன்பாடுகளை விளக்குவதற்கும் பெரும் வேறுபாடிருக்கிறது.  ஆவிக்குரிய பயன்பாடுகள் எப்பொழுதுமே எழுத்துபூர்வமானதாகக் காணப்படும். அதாவது, ஆவிக்குரிய பயன்பாடுகள் கற்பனைமயமானதல்ல; கண்களுக்குப் புலப்படாத, கண்டுகொள்ள முடியாத, உணரமுடியாத, உருவமற்ற அமாநுஷ்யமானவையல்ல.

ஆவிக்குரிய பயன்பாடு எவ்வாறு எழுத்துபூர்வமானதாக அமைய முடியும்?

வேதவசனங்களிலிருந்து பெறப்படும் ஆவிக்குரிய பயன்பாடுகள், அந்த வேதப்பகுதியில் காணப்படும் வார்த்தைகள், அப்பகுதியின் இலக்கியவகை, அப்பகுதியில் வரும் நபர்கள் மற்றும் அப்பகுதியில் கர்த்தர் நல்லதெது, கேடானதெது என்று விளக்கும் உண்மைகள் ஆகியவற்றால் கட்டப்பட்டுக் காணப்படும். அதாவது, அவற்றை மீறி அமைந்தவையாக இருக்காது. சுருக்கமாகச் சொன்னால், ஆவிக்குரிய பயன்பாடுகள் கர்த்தரின் எழுத்துபூர்வமான வார்த்தைகள் காணப்படும் சந்தர்ப்பத்தை ஒருபோதும் மீறி அமையாது; அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலே அதை மீறும். வேதத்தை எழுத்துபூர்வமாகப் பயன்படுத்த மறுப்பவர்களே அதை அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்கும் செயலில் ஈடுபடுவார்கள். இம்முறை 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளின் காலத்தில் பரவலாக இருந்தது. அதன் காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் வேதத்தை எழுத்துபூர்வமாக மட்டுமே விளக்கவேண்டும் என்றும், அதற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு என்றும் ஆணித்தரமாக விளக்கிவந்தார்கள்.

ஒரு வசனத்தை எழுத்துபூர்வமாக அது காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் மொழிக்குரிய இலக்கிய, இலக்கண விதிகளைப் பயன்படுத்தி அதன் மெய்யான அர்த்தத்தைத் தெளிவாகக் கண்டுகொண்ட பின்பே அதிலிருந்து அது தரும் எழுத்துபூர்வமான பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் போதித்திருக்கும் வேதவிளக்க முறை.

எழுத்துபூர்வமான பயன்பாடுகள் வேதத்தை எழுத்துபூர்வமானதாகக் கணிப்பதனால் பெறப்படுபவை; அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதல் வேதத்தை எழுத்துபூர்வமானதாகக் கணிக்க மறுக்கும் வெறும் கற்பனை மட்டுமே.

வேதத்தை எழுத்துபூர்வமாகக் கணித்து விளங்கிக்கொள்வதற்கு திருமறைத்தீப இதழ்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சீர்திருத்த பாப்திஸ்து பெரியவரான மறைந்த ஆர்த்தர் பிங்கின் வேதத்தை விளக்கும் முறை பற்றிய ஆக்கங்கள் உங்களுக்கு உதவும். கர்த்தரின் வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும், அதிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் ஒருவன் ஆவிக்குரியவனாக, கர்த்தருக்கு விசுவாசமுள்ளவனாக ஊழியப்பணியில் தொடர முடியாது. அதேவேளை, அதில் கவனம் செலுத்தாத ஆத்துமாவும் கிறிஸ்தவ வாழ்க்கையில் முடமானவனாகவே வாழ்ந்து வருவான்.

மறுமொழி தருக