ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு

தொகுதி 1 – நூல் மதிப்பீடு

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸைப் பற்றிய ஆக்கத்தை நான் எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நாட்குறிப்பை ஆங்கிலத்தில் அவருடைய மகன் தொகுத்திருந்தது பற்றி அறிந்தேன். அதைக் கணனியில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்த பின் என் ஆக்கத்தைத் திருமறைத்தீபத்தில் வெளியிட்டிருந்தேன். அது வெளிவருவதற்கு முன், ரேனியஸின் நாட்குறிப்பு தமிழில் வெளியிடப்பட்டிருப்பதாக நண்பர் தேவராஜ் சொன்னதால், அவருடைய துணையோடு அதைப் பெற்றுக்கொண்டேன். அது மூன்று பாகமாக வெளிவந்திருக்கிறது. முதலாவது தொகுதி 2016ல் வெளியிடப்பட்டிருக்கிறது. உன்னத சிறகுகள் என்ற பதிப்பகம் அதை வெளியிட்டது. இதைத் தொகுத்தவர் ஜெபக்குமார் என்ற இளைஞர் என்றும், அவர் ஐக்கிய அரபு குடியரசில், அபுதாபியில் வாழ்கிறார் என்றும் அறிந்துகொண்டேன். இதை மொழிபெயர்த்தவர் வினோலியா. வேறு சிலரும் அவருக்கு மொழிபெயர்ப்பில் துணையாக இருந்திருக்கிறார்கள்.

இதுவரை நாட்குறிப்பின் முதலாம் தொகுதியை மட்டும் வாசித்து முடித்திருக்கிறேன். அது 464 பக்கங்களைக் கொண்டது. நம்மவர்களில் பலருக்கு அத்தனை பக்கங்களா? என்று கேட்டு மூச்சு வாங்கும். முதலில், இதைத் தொகுத்தளித்திருக்கும் ஜெபக்குமாருக்கு என் பாராட்டுக்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் எவரும் இதைச் செய்யத் தயங்கியிருப்பார்கள். வரலாற்று, இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அதில் ஈடுபடுவார்கள்; அவர்கள் மட்டுமே இதைப் பொறுமையோடு வாசிப்பார்கள். இந்நாட்குறிப்பை ஆங்கிலத்தில் தொகுத்தளித்த ரேனியஸின் மகன் இன்று உயிரோடிருந்திருந்தால் ஆனந்தப்பட்டிருப்பார். ரேனியஸின் பெயரைக்கூடப் பயன்படுத்தத் தயங்கி, அவரது வரலாற்றை மறைக்கடிக்க முனைகிற தென்னிந்திய திருச்சபை உட்பட்ட ஆங்கிலேய திருச்சபையின் குட்டை இந்த நாட்குறிப்பு பகிரங்கப்படுத்துகிறது. இதன் மூலம் மட்டுமே ரேனியஸின் அருட்பணிகள் பற்றிய அவரது சொந்தக் கருத்துக்களையும், அவரைச் சுற்றி உருவாகியிருந்த திருச்சபைப் பிரச்சனைகளுக்கான காரணங்களையும், அவரது மகத்துவமான சுவிசேஷம் மற்றும் திருச்சபைப் பணிகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதை நான் ஏற்கனவே திருமறைத்தீபம் இதழில் வந்த என் ஆக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இம்முதல் தொகுதி, ரேனியஸ் அருட்பணி செய்வதற்கு முடிவெடுத்து பெர்லினில் இறையியல் கல்லூரியில் இணைந்ததில் ஆரம்பித்து அவர் இந்தியாவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வந்திறங்கி, திருச்சபை அருட்பணி சங்கத்தின் (CMS) அருட்பணியாளராகச் சென்னையில் இருந்து அதன் சுற்றுப்புறங்களில், இன்றைய ஆந்திரா, தெலுங்கானா எல்லைகள்வரைப் பிரயாணம் செய்து ஐந்து வருட காலத்துக்குள் (1814-1819) செய்திருந்த பணிகளை விளக்குகிறது. இதெல்லாம் அவர் திருநெல்வேலிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக நிகழ்ந்த அருட்பணிகள். இக்காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றிய உற்ற நண்பரான பெர்னாட் ஸ்மித், இந்திய கிறிஸ்தவர்களான அப்பாவு, சாந்தப்பன் போன்ற அருமையான மனிதர்களைப் பற்றியும் இத்தொகுதியிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாக்கம் இந்தத் தொகுதிக்கான மதிப்பீடாக இருந்தபோதும், இம் முதல் தொகுதியில் காணப்படும் ரேனியஸ் பற்றிய சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடாமல் இருந்துவிட முடியாது. ரேனியஸின் அருட்பணியின் ஆரம்ப காலத்திலேயே கர்த்தர் அவரை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதை நாட்குறிப்பு விளக்குகிறது. தரங்கம்பாடியில் இரண்டு வருடங்களுக்குக் குறைந்த காலத்தில் தமிழைக் கற்று, சென்னை திரும்பிய இந்த ஆரம்ப காலத்தில் தன் பேச்சுத் தமிழ் மிக மோசமாக இருந்தது என்று கூறும் ரேனியஸ், காலம் போகப்போக தமிழில் சரளமாகப் பேசிப் பிரசங்கித்திருக்கிறார். அவருக்குத் தெலுங்கு மொழியிலும் பரிச்சயம் இருந்தது.

ஒரு அருட்பணியாளனுக்கு (மிஷனரி) தான் பணி செய்யும் இன மக்களுடைய மதம், சமூக வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றில் நல்லறிவு இருப்பது அவசியம். ரேனியஸ் அவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுத் தேர்ந்திருந்தார். இத்தொகுதியில் இந்து மதத்தைப் பற்றிய அவருடைய விளக்கத்தைக் காணலாம் (பக். 106). காஞ்சிபுரம் பகுதியில் அதிகமாக வசித்து வந்த ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்களிடம் அவர் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். அந்த மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் ரேனியஸ் நாட்குறிப்பில் விளக்குகிறார். ஜெயின் மதத்தவர்களோடு அவர் நடத்தியிருக்கும் சுவிசேஷ உரையாடல்களை இந்தத் தொகுதி பல இடங்களில் விளக்குகிறது.

இத்தொகுதி மூலம் அவருடைய சுவிசேஷப் பணியின் சிறப்பை நாம் அறிந்து கொள்கிறோம். பவுலைப் போல நகரங்கள், கிராமங்களென்று அன்றைய பிரிட்டிஷ் சென்னைப் பட்டிணப் பகுதிகளெல்லாம் பிரயாணம் செய்து ரேனியஸ் சுவிசேஷத்தை அறிவிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தது மட்டுமல்லாமல், அதில் ஆவியின் அளவற்ற ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தார். கிராம, நகர்ப்புறங்களில் சந்தித்தவர்களுக்கெல்லாம் இயேசு கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பை அவர் விளக்கியிருக்கிறார். பிராமணர்களும், ஜெயின் மதத்தவர்களும், அரச குடும்பத்தாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் அவரிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரளமாகப் பேசி சுவிசேஷ உண்மைகளைக் கேட்டுப் பயனடைந்திருக்கிறார்கள். ரேனியஸ் அதிகம் வினாவிடை முறையைப் பயன்படுத்தி சந்திக்கிறவர்களிடம் கேள்விகளைக் கேட்டு வழிநடத்திப் பாவத்தைப் பற்றியும், கிறிஸ்துவைப்பற்றியும் உணரவைத்திருக்கிறார். சிலரோடு நிகழ்ந்த அத்தகைய வினாவிடை உரையாடல்களை இத்தொகுதியில் காணலாம். இந்து, மற்றும் ஜெயின் மதத்தவர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் அவர் சுவிசேஷத்தை அறிவித்திருக்கிறார். ரேனியஸின் சுவிசேஷப் பணியில் எந்தவிதமான போலித்தனமும் காணப்படவில்லை. மக்களுடைய கஷ்ட நிலையைப் பயன்படுத்திப் பிணிதீர்க்கும் சித்துவேலைசெய்யவோ, சுவிசேஷம் என்ற பெயரில் அசட்டுத்தனமான உப்புச்சப்பற்ற செய்திகளை அளிக்கவோ, பணத்தையோ, சுயநலநோக்கத்தையோ குறியாகக் கொண்டு அவர்களை மதம் மாற்றவோ அவர் முயலவில்லை. கர்த்தரை நம்பி வேதவிளக்கங்களைத் தெளிவாக அளித்து தங்களுடைய பாவத்தன்மையைக் கேட்பவர்கள் உணரும்படியாக அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார்; இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார். இதெல்லாம் இன்று தமிழினத்தில் அருகிக் காணப்படும் சீர்திருத்தவாதப் பாணி சுவிசேஷப் பணியையும், சத்தியப் பிரசங்கத்தையும் இனங்காட்டுகிறது.

ரேனியஸ் எப்போதும் தன் கையில் தான் வெளியிட்டிருக்கும் துண்டுப்பிரதிகள் மற்றும் முக்கியமான சிறு நூல்களைக் கொண்டு சென்று தான் சுவிசேஷம் சொன்னவர்களின் தேவைக்கேற்றபடி கொடுத்து அவர்களை வாசிக்கச் செய்திருக்கிறார். அவரைச் சந்தித்தவர்கள் வாசிப்பதற்கு அவற்றைத் தருமாறு கேட்டு அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவற்றை வாசித்துவிட்டு விளக்கம் கேட்டு அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். இவ்விலக்கியங்களில் ரேனியஸ் எழுதி வெளியிட்ட “ஞானோபதேசம்” நூல் முக்கியமானது. அது கிறிஸ்தவ இறையியலை விளக்கும் சிறுநூல். ரேனியஸின் சுவிசேஷப்பணியில் இறையியல் நூல்களும், வேதவிளக்க நூல்களும், துண்டுப்பிரதிகளும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இவற்றை அவர் தமிழிலும், தெலுங்கிலும் அச்சிட்டிருந்தார்.

இந்தக் குறுகிய ஐந்து வருடகாலத்தில் ரேனியஸ் தமிழை அருமையாகக் கற்று, அம்மொழியில் பேசிப் பிரசங்கித்து, நூல்களையும், துண்டுப் பிரதிகளையும் வெளியிட்டிருக்கிறார் என்பது மிகுந்த ஆச்சரியத்தையும், அதேநேரம் அவருடைய விடாமுயற்சியோடு கூடிய கடுமையான, வைராக்கியமான உழைப்பையும், கல்வித் தகுதிகளையும், அறிவுத் திறனையும் வெளிப்படுத்துகிறது. இருந்தபோதும் ரேனியஸின் தமிழைத் திறம்படக் கற்றுப் பயன்படுத்தும் விடாமுயற்சி அவருடைய வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். அவ்வாறில்லாமல் ஜெர்மானியரான அவரால் அதில் மொழிப்பாண்டித்தியத்தை அடைந்திருக்க முடியாது; கிறிஸ்தவ இலக்கியங்களையும், இலக்கண நூலையும் படைத்திருக்க முடியாது. ரேனியஸ் திருநெல்வேலி சென்றபின்பு திருப்பாற்கடல் நாதன் என்பவரிடம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை வாசித்தேன். இது எந்தளவுக்கு உண்மையானது என்பது தெரியவில்லை. அவர் நிச்சயம் தமிழை அருமையாகக் கற்றுக்கொள்ளுவதில் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். அவர் அக்காலத்து தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் நிச்சயம் கற்றிருந்திருப்பார்.

ரேனியஸின் சுவிசேஷப்பணி எப்போதுமே திருச்சபை சார்ந்ததாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு கிறிஸ்தவ இறையியலைப் போதித்து ஞானஸ்நானமளித்து திருச்சபை அங்கத்தவர்களாக்கியிருக்கிறார் ரேனியஸ். அதைச் செய்வதில் அவர் மிகக் கவனத்தோடு செயல்பட்டிருக்கிறார். ஆத்துமாக்களை மேய்க்கும் பணியில் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வுகளையும் அவர் சந்தித்திருக்கிறார். புறமத சமூகம் தொடர்பான விஷயங்களில் அவர் மிகுந்த ஞானத்தோடு செயல்பட வேண்டியிருந்தது. தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் இயேசுவின் அன்பை மனதிலிருத்தி அவர் தன் பணியைத் தொடர்ந்திருக்கிறார்.

இந்நாட்குறிப்புத் தொகுதியில் நான் கவனித்த இன்னுமொரு அம்சம், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கிறிஸ்தவ வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருந்திருக்கிறது. இது இரண்டாவது மொழிபெயர்ப்பான பெப்ரீஸியனின் மொழிபெயர்ப்பு. இருந்தபோதும் ரேனியஸ் சந்தித்த மக்கள் அது தங்களுக்குப் புரியவில்லை, வாசிக்க எளிமையான மொழியில் இல்லை என்று அடிக்கடி குறைகூறியிருப்பதை நாட்குறிப்பின் பல இடங்களில் காணமுடிகிறது. இதைப் பற்றி எழுதும் ரேனியஸ் சொல்கிறார்,

“தமிழ் புதிய ஏற்பாடு எளிதில் விளங்கமுடியாததாக இருக்கிறது என்பதைப் பலரும் அடிக்கடி கூறுவதைக் கேட்பதின் வழியே அதைத் திருத்தி எழுதுவதின் தேவையை அதிகம் உணருகிறேன்.”

கொல்கத்தாவில் இருந்த ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவரும், CMS அருட்பணியாளருமான, டாக்டர். குளோடியஸ் பியூக்கனனின் தமிழ் வேதாகமத்தைப் பற்றிய கருத்தை ரேனியஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. பியூக்கனன் தன் நூலில்,

“பல மறுதிருத்தப்பதிப்புகளுக்குப் பிறகு, இந்தத் தமிழ் வேதாமகம் மிகச் சிறந்த செம்மொழித் தன்மையைப் பெற்றிருக்கிறது எனப் பிராமணர்களே சிலாகிக்கிறார்கள்.”

என்று குறிப்பிட்டிருந்ததை ரேனியஸ்,

“டாக்டர் பியூக்கனன் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் தவறான தகவலைப் பெற்றிருக்கிறார் என்று மட்டும் சொல்லமுடியும். ஏனென்றால், அந்த மொழிபெயர்ப்பு மிகவும் சாதாரணமான நிலையிலேயே இருந்தது . . .” என்று தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் (பக் 296-297).

பிரபலமானவரான பியூக்கனனின் இந்தக் கருத்து பிறர் மத்தியில் அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ரேனியஸ்.

டாக்டர் பியூக்கனன் சிறந்த அறிவாளி; ஜோன் நியூட்டனின் சுவிசேஷ செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை விசுவாசித்தவர். சீர்திருத்த பாப்திஸ்தான வில்லியம் கேரியைத் தன்னுடைய வேதமொழிபெயர்ப்புக் குழுவிற்குப் பொறுப்பாளராகவும் கொண்டிருந்தவர். ஆனால், ஆரம்பத்தில், பிறர் பேச்சைக் கேட்டுக் கேரியை மிகக்குறைவாகத் தரம் தாழ்த்தி மதிப்பிட்டு அவரைப்பற்றி பியூரிட்டனான ஜோன் நியூட்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை வாசித்து மிகவும் மனவருத்தமடைந்த ஜோன் நியூட்டன்,

“நான் அற்புதங்களை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், கர்த்தர் நம் காலத்தில் ஒரு அற்புதத்தைச் செய்வாரானால், அது வில்லியம் கேரியைச் சார்ந்திருக்குமானால் அதைக்குறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கேரியைப் பற்றி மிக உயர்வாக எழுதி பியூக்கனனின் தவறைத் திருத்தினார் (https://www.wholesomewords.org/missions/bcarey17c.html).

இதற்குப் பிறகு பியூக்கனன் கேரியை மிகவும் மதித்து அவருக்குத் தன்னால் முடிந்த சேவைகளைச் செய்திருக்கிறார். எனவே, தமிழ் வேத மொழிபெயர்ப்பு பற்றிய கருத்திலும் பியூக்கனன் யார் சொல்லையோ கேட்டு அவசர முடிவெடுத்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சீகன் பால்குவின் 1715ம் ஆண்டு தமிழ் வேதாகம முதலாவது மொழிபெயர்ப்பில் இருந்து நாம் கடந்து வந்திருக்கும் காலத்தில் வெளிவந்திருக்கும் தமிழ் வேதமொழிபெயர்ப்புகளின் தரத்தை ஆராயும்போது என்னால் இந்த விஷயத்தில் ரேனியஸின் கருத்தோடேயே ஒத்துப்போக முடிகிறது. இன்று நம்மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய திருப்புதல் தமிழ் வேதாகமம் நல்ல தமிழில் துல்லியமாகத் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என்பதை எவரால் மறுக்கமுடியும்? அந்தந்தக் காலப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் மொழி வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கேற்றவகையில் வேதாகமும் திருத்தி வெளியிடப்பட வேண்டிய அவசியத்தைப் பல நல்ல ஆங்கில வேதாகமத் திருத்தப் பதிப்புகள் நம்மை உணரவைக்கவில்லையா?

ரேனியஸ் தமிழில் ஏற்கனவே இருந்த வேதமொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிடும் பணியையும் தன் ஊழியக் காலத்தின் ஆரம்பப் பகுதிலேயே சென்னையில் தொடங்கி அதில் நல்ல முன்னேற்றம் கண்டு, சில பகுதிகளை அச்சிடவும் ஆரம்பித்திருக்கிறார் என்பதை நாட்குறிப்பு விளக்குகிறது. தமிழகத்தில் வந்திறங்கிய சில வருடங்களுக்குள்ளாகவே அவர் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களின் திருத்திய மொழிபெயர்ப்பை அச்சுக்குத் தயாராக்கியிருந்தார். இருந்தபோதும் வேதத்தைத் திருத்திப் பதிப்பிக்கும் பணியில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய பழைய ஏற்பாட்டுத் திருத்தங்களைத் தரங்கம்பாடியில் இருந்த மிஷனரிகள் கடுமையாக எதிர்த்திருந்தனர் (பக் 116). பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரேனியஸ் வேதத்திருத்தப் பணிகளைத் தொடர வேண்டியிருந்தது. அத்தோடு புதிய ஏற்பாட்டையும் திருத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஒரு சாதாரண மனிதனால் ஐந்து வருடங்களுக்குள் இத்தனையையும் எப்படிச் செய்ய முடிந்தது? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்குப் பதில் கர்த்தரின் ஆவி அவரோடிருந்திருக்கிறது என்பதுதான். மொழிபெயர்ப்பு என்பது கடினமான பணி; அதிலும் வேதமொழிபெயர்ப்பு என்பது அசாதாரண பணி. அதைச் செய்யும் வைராக்கியமும், அதற்கு அவசியமான ஆற்றல்களும், மொழிப்பாண்டித்தியமும் ரேனியஸில் நிறைந்திருந்தன. வேதமொழிபெயர்ப்பில் மற்றவர்களோடு ரேனியஸுக்கு ஏற்பட்டிருந்த பெரும் கருத்து வேறுபாடுகளை இன்னொரு ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

ரேனியஸ் பிரயாணம் செய்தபோது எப்போதும் ஒரு பல்லக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். அதைச் சிலர் சுமந்து சென்றிருக்கிறார்கள். அவருடன் பணிசெய்தவர்களே அவரோடு பயணித்திருக்கிறார்கள். போகும் கிராமங்கள், நகர்ப் பகுதிகளில் அவர் ஒருபோதும் எவருடைய வீட்டிலும் தங்கவில்லை. மக்கள் அழைத்தபோதும் அவர் அதைச் செய்யவிரும்பவில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய வீடு அந்நிய நாட்டு மனிதனின் வருகையால் தீட்டுப்பட்டு விடும் என்ற நம்பிக்கை அன்றிருந்ததால் ரேனியஸ் எவருக்கும் பிரச்சனையை உண்டாக்க விரும்பவில்லை. ஊர் மக்கள் மழைக் காலத்தில் அவருடைய பல்லக்கைத் துணிகளால் சுற்றி அவர் மீது மழைநீர் படாமலிருக்க உதவியிருக்கிறார்கள்; உணவும் அளித்திருக்கிறார்கள். மழையில்லாத வேளைகளில் மரத்தடிகளிலும், சேதமடைந்திருந்த கட்டடங்களின் சுவர்களிலும் சாய்ந்திருந்து இரவைக் கழித்திருக்கிறார் ரேனியஸ். இத்தகைய சுயநலமற்ற, தியாகமும், அர்ப்பணிப்புமுள்ள ஊழியத்தை இன்று எங்கு பார்க்க முடிகிறது?

திருச்சபை அருட்பணிச் சங்கத்தைச் (CMS) சேர்ந்த ரேனியஸின் எதிரிகள் அவருடைய ஊழியத்தின் பிற்காலத்தில் அவர் மேல் வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர் சாதிப்பிரிவை ஆதரிக்கிறார் என்பது. அது எத்தனை பொய் என்பதை ரேனியஸின் இந்நாட்குறிப்புத் தொகுதி விளக்குகிறது. அன்றிருந்த சாதிகள் மற்றும் மதங்களைப் பற்றிய விபரங்களைத் தந்திருக்கும் ரேனியஸ், சாதிப்பிரிவு கிறிஸ்தவ சபைகளில் இல்லாதிருப்பதற்கு எடுத்திருந்த நடவடிக்கைகளையும் விளக்குகிறது நாட்குறிப்பு. சாதிப் பிரச்சனைக்கு இடங்கொடுக்கக்கூடாதென்பதற்காகத் திருநெல்வேலியில் தான் நடத்தி வந்திருந்த செமினரியையே அவர் தற்காலிகமாக மூடி, அந்தத் தீர்மானத்தை அருட்பணிச் சங்கத்துக்கு எழுத்தில் அறிவித்திருக்கிறார். அப்போதிருந்த ஏனைய அருட்பணிச் சங்கங்கள் சாதிப்பிரிவைத் திருச்சபையில் அனுமதித்திருந்தன. ஆனால், ரேனியஸ் அதற்கு இடங்கொடுக்க மறுத்துத் தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். ரேனியஸ் ஆணித்தரமாக எழுதுகிறார்,

“வெறும் கிறிஸ்தவ பெயர்களில் என்ன பயன்? இதைவிட ஆவியானவர் தனது பலங்கொண்டு நாம் மகிழத்தக்கதான பிள்ளைகளை உருவாக்கும்வரை நாம் தரிசாகவே கிடப்போம். ஏனெனில் அப்படிப்பட்ட பிள்ளைகளே இந்த மக்களிடையே நாம் உழைத்த உழைப்பின் அறுவடை” (பக் 451-452).

சாதிப்பிரிவால் சிதழடைந்து காணப்படும் இன்றைய தென்னிந்திய திருச்சபை இதற்கு என்ன பதில்கூறப் போகிறது?

இனி இந்தத் தொகுதியில் காணப்படும் சில குறைபாடுகளை என்னால் முன்வைக்காமல் இருக்க முடியாது. இனி வரும் பதிப்புகளில் இந்தக் குறைகள் நீக்கப்படுமானால் இந்தத் தொகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (font) தகுதியற்றது. கையெழுத்து போன்ற, வாசகர்களைத் தூண்டி வாசிப்பதற்குத் தடையேற்படும் ஒரு எழுத்துருவை பதிப்பகத்தார் பயன்படுத்தியிருப்பது குழந்தைத்தனமானது என்றே கருதுகிறேன். 400 பக்கங்களுக்கு மேலான ஒரு நூலில் இத்தகைய எழுத்துரு ஒருபோதுமே பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. ஆரம்பத்தில் இதை வாசிக்க எழுத்துரு எனக்கே தடையாக இருந்தது. இருந்தபோதும் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலால் அதையும் மீறி வாசித்து முடித்தேன். ஆனால், வாசிப்பனுவத்தில் ஊறிப்போயிராத கிறிஸ்தவ தமிழ் வாசகர்கள் அவ்வாறிருந்துவிட மாட்டார்கள். இந்த எழுத்துருவில் சில எழுத்துக்கள் முழுமையற்றவையாக, அவை யாவை என்று இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாதவையாக இருந்தன. ஒரு சிறு கடிதத்தையோ அல்லது கவிதையையோ அச்சிட்டால் இந்த எழுத்துரு அவற்றிற்குப் பொருத்தமானதாக இருந்திருக்கும். பொறுமையோடு வாசகர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நீண்ட நூலுக்கு இது நிச்சயம் பயனுள்ளதல்ல. நூல்வெளியீட்டில் அனுபவமுள்ளவர்களோடு கலந்துரையாடி இந்தத் தவறைத் தவிர்த்திருக்கலாம். நாட்குறிப்பின் 2ம், 3ம் தொகுதிகளிலும் இதே எழுத்துருவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது நிச்சயம் நம்மினத்து வாசகர்களுக்கு உதவாது. இது நாட்குறிப்பின் பயனைக் குறைத்துவிடுகிறது. அத்தோடு, ஒவ்வொரு வரியையும் லெட்டர் பேட்டில் இருப்பதுபோல் கோடிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் என்னைப் பொறுத்தளவில் குழந்தைத்தனமான செய்கை.

2. நூல் முழுவதும், பக்கம் பக்கமாக சந்திப்பிழைகள் (ஒற்றுப்பிழைகள்) காணப்படுகின்றன. தற்காலத்தில் தமிழர்கள் பெரும்பாலும் வாசிப்பதையும், எழுதுவதையும் வழக்கத்தில் கொண்டிராமல் இருப்பதால் சந்திப்பிழைகளை அவர்களால் தவிர்த்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. தமிழில் சந்திப்பிழைகள் இல்லாமல் எழுத இலக்கணம் தெரிந்திருத்தல் அவசியம். உண்மையில் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற போக்கே பத்திரிக்கை மற்றும் நூல்களைப் படைப்பவர்கள் மத்தியிலும் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இத்தகைய பிழைகளோடு ஒருபோதும் நூல்களை வெளியிட மாட்டார்கள். அவற்றைத் திருத்தி வெளியிட ஆற்றலும், தகுதியும் உள்ளவர்களை அமர்த்தி நூலில் எந்தப் பெரிய பிழைகளும் இல்லாமல் வெளியிடுவதில் கவனத்தோடு உழைத்திருப்பார்கள். இனிவரும் பதிப்புகளிலாவது தகுந்தவர்களைப் பயன்படுத்தி சந்திப்பிழைகள் இல்லாமல் அச்சிடுவது தமிழைக் காக்கும்; நூலின் தரத்தையும் உயர்த்தும். அத்தோடு, பல இடங்களில் இலக்கணத் தவறுகளும் காணப்படுகின்றன. வசனங்களில் ஒருமை, பன்மை பிரச்சனை அதிகம். பன்மையில் முடியவேண்டிய வசனங்கள் ஒருமையில் முடிந்திருக்கின்றன. எழுத்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் நானும் முடிந்தவரை இத்தகைய பிழைகள் இல்லாமல் நூல்களை அச்சிடவே முயற்சித்து வருகிறேன். இத்தொகுதியின் புதிய பதிப்புகளில் இத்தவறுகளை நீக்கவேண்டியது அவசியம்.

3. தொகுதியின் சில பகுதிகளை ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். உண்மையில் மொழிபெயர்ப்பு தரமாக இருந்தது; ஒரு சில இடங்களில் தவிர. இந்தத் தவறுகளைச் சரிசெய்வது அவசியம். உதாரணத்திற்கு, 315ம் பக்கத்தில், ரேனியஸ் தன் பிரயாணத்தின்போது செங்கல்பட்டு வந்து சேர்ந்து தங்குவதற்கு ஓரிடத்தைத் தேடினார். வசதியாகக் கிடைத்த ஒரே இடம் ரோமன் கத்தோலிக்க சிற்றாலயம் மட்டுமே. அதைப் பற்றி இவ்வாறு தொகுதி விளக்குகிறது,

“ரோமன் கத்தோலிக்கர்களுடன் இருப்பதைக் காட்டிலும் புறமதத்தவர்களுடன் என்னால் இருந்துவிட முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. ஆகவே, நான் இதற்குச் சம்மதித்தேன். என்றாலும், ‘இயேசுவைவிட நல்ல தங்கும் இடம் எனக்குக் கிடைத்தது . . .’ ”

இந்தக் கடைசி வரி முழுத் தவறானது; இறையியல்பூர்வமாக மோசமானது. இன்னொரு உதாரணம், ஜெயின் மதத்தைக் கிறிஸ்தவத்தோடு ஒப்பிட்டு விளக்கும்போது 334ம் பக்கத்தில் ஒரு வசனம் குழப்பத்தை உண்டாக்குகிறது. “இரண்டிலும் சிலைவழிபாடு மற்றும் மூட நம்பிக்கைகள் கலந்திருக்கிறது” என்று எழுதியிருப்பது தவறான இறையியல் கருத்தைத் தந்துவிடுகிறது. இது ரோமன் கத்தோலிக்க மதத்திற்குப் பொருந்தும். ஆனால், கிறிஸ்தவம் அப்படிப்பட்டதல்ல.

தொகுதியின் மொழிநடை எளிமையாக இருந்தது; நாட்குறிப்பிற்குத் தகுதியான நடைதான். வாசகர்கள் வாசிப்பதற்குத் தடையில்லாமல் இருக்கின்றது. ஒரு சில வார்த்தைகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கலாம் (விசித்திரம், விளம்பல், நற்செய்தி பரப்பாளர்). இருந்தபோதும் முழு வசனத்தையும் வாசிக்கும்போது அவற்றின் பொருளைப் புரிந்துகொள்வது கடினமல்ல.

4. இத்தொகுதியின் பின் அட்டையில் ரேனியஸ், திரள்கூட்ட சுவிசேஷ இயக்கத்தை (Mass Movement Evangelism) இந்தியாவில் ஆரம்பித்து வைத்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மிக மிகத் தவறான ஊகம்; அது ரேனியஸின் இறையியல் நம்பிக்கைகளை அறியாமல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த முறையில் ரேனியஸ் தன் சுவிசேஷப் பணியை என்றுமே நினைத்ததில்லை; அறிவிக்கவும் இல்லை. அவரிடம் சுவிசேஷம் கேட்க வந்த கூட்டம் காடுகொள்ளாப் பெருங்கூட்டமுமல்ல. அவர் போன இடங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவர் சுவிசேஷத்தை அறிவித்திருக்கிறார்; அவர் செய்தது அது மட்டுமே. சீர்திருத்தவாதப் போதனைகளை நம்பி விசுவாசித்திருந்த ரேனியஸுக்கு சுவிசேஷப் பணியைப் பற்றிய உலகத்தனமான எண்ணமெல்லாம் ஒருபோதும் இருக்கவில்லை.

சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றிய 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஸ்பர்ஜன் காலத்திலெல்லாம் பெருங்கூட்டத்தில் அவர்கள் சுவிசேஷம் அறிவிக்க கர்த்தர் ஒரு எழுப்புதலை ஏற்படுத்தியிருந்தபோதும் இவர்களில் எவருமே அத்தகைய கூட்டத்தை உருவாக்கவோ, அதைப் பற்றி நினைக்கவோ இல்லை. இத்தகைய வார்த்தைப் பிரயோகமும் அவர்களைக் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை. ரேனியஸின் அருட்பணிக் காலம் நெல்லையில் குறுங்கால எழுப்புதல் காலம் என்பதை மறுக்கமுடியாவிட்டாலும் அந்த எழுப்புதல் பிரிட்டனில் ஜோர்ஜ் விட்பீல்ட், அமெரிக்காவில் ஜொனத்தனை எட்வர்ட்ஸ் போன்றோர் ஊழியத்தில் காணப்பட்டதுபோல் பெருந்திரளான கூட்டத்தை சந்திக்கவில்லை. இப்படிச் சொல்வதால் நான் எந்தவிதத்திலும் ரேனியஸின் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை; அநாவசியத்துக்குத் தேவையற்ற, வரலாற்றுக்குப் புறம்பான, சீர்திருத்த இறையியலுக்கு மாறான செய்திகளை உருவாக்குவதைத்தான் நிராகரிக்கிறேன். ஆர்மீனியனிசப் போதனைகளைப் பின்பற்றிய சார்ள்ஸ் பினி மற்றும் பில்லிகிரெகாம் போன்றவர்கள் மெய்யான தெய்வீக எழுப்புதலின் அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் கூட்டிய திரள்கூட்ட வித்தைகளையெல்லாம் சீர்திருத்த அருட்பணியாளரான ரேனியஸ் அடியோடு நிராகரித்திருப்பார். இந்த நாட்குறிப்பை உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்து வெளியிடுவதோடு நின்றிருக்கலாம். இத்தகைய தவறான கருத்துகளைத் தவிர்த்திருக்கலாம்.

இதுவரை நான் விளக்கியிருக்கும் பிழைகள் நீக்கப்பட்டு புதிய தொகுப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரேனியஸின் நாட்குறிப்பின் இந்த முதல் தொகுதியை நிச்சயம் கிறிஸ்தவர்கள், அதுவும் போதகப் பணியில் இருப்பவர்கள் வாங்கி வாசிப்பது அவசியம். கிறிஸ்தவ ஊழியம் மக்கள் மத்தியில் மதிப்பற்ற செல்லாக்காசாக இருக்கும் தற்காலத்தில் சுயத்தை இழந்து ஊழியம் செய்வது எப்படி என்பதை ரேனியஸ் நமக்குக் கற்றுத் தருகிறார். திருத்தி வெளியிடப்படுமானால் இந்தத் தொகுதி இறையியல் கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இறையியல் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பாடப்புத்தகங்களில் ஒன்றாகவும் இருக்கவேண்டும். ரேனியஸ் போன்ற அருமையான அருட்பணியாளர்களையும், அவர்களுடைய நல்லூழியங்களையும் பற்றி எதுவும் தெரியாமல் கிறிஸ்தவம் என்ற பெயரில் கண்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களின் இருதயத்தில் இத்தகைய நூல்களே ஒளியேற்றி வைக்கமுடியும். ஆனால், இதை வாங்கி, வாசித்துப் பயனடையக்கூடிய ஆவிக்குரிய இருதயங்கள் எத்தனை நம்மத்தியில் இருக்கின்றன?

இறுதியாக, ரேனியஸின் வாழ்க்கை, அருட்பணிகள் ஆகியவற்றைப் பற்றி வாசிப்பது, அவருடைய பணிகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவதோடு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம் காலத்தில் செய்யும் தவறுகளைக் களைந்து அவரைப்போலத் தியாகத்தோடு கர்த்தருக்காகப் பணிசெய்வதில் மட்டுமே நம்மை வழிநடத்தவேண்டும். உண்மையிலேயே ரேனியஸின் வாழ்க்கையும், பணிகளும் நம்மைப் பாதித்திருந்தால் அவர் நம்பிப் பின்பற்றிய சீர்திருத்தப் போதனைகளில் நாமும் ஆர்வம் காட்டி அவற்றை ஆர்வத்தோடு கற்று, வைராக்கியத்தோடு பின்பற்றிப் பக்திவைராக்கியத்தோடு வாழ்வதை மட்டுமே நாம் செய்யத் துடிப்போம். அதைவிட்டுவிட்டு, அவருக்காக வருடத்துக்கொருமுறை திருவிழாக்கொண்டாடுவதிலும், அவருக்குச் சிலைகள் எழுப்புவதிலும், அவர் கட்டிய ஆலயக் கட்டிடங்களை அலங்கரித்து விளக்கேற்றி விழாக்கொண்டாடுவதிலும், அவருக்குக் கட்அவுட் வைத்து ஒரு ஹீரோவாக மற்றவர்கள் பார்வையில் அவரைக் காட்ட முயல்வதிலும் ஈடுபடுவோமானால் ரேனியஸை அவமானப்படுத்த அவற்றைவிடக் கேவலமான செயல்கள் ஒன்றுமிருக்க முடியாது. ரேனியஸ் உயிரோடிருந்தால் இவற்றில் எதையுமே அனுமதிக்க மாட்டார். தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இந்தத் தவறுகளைச் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

மறுமொழி தருக